search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாடாளுமன்ற ஓட்டெடுப்பு"

    அமெரிக்காவில் பிறக்கிற பிற நாட்டு தம்பதியரின் குழந்தைகளுக்கு குடியுரிமை மறுக்கும் விவகாரத்தில், நாடாளுமன்ற ஓட்டெடுப்பு போதும், அரசியல் சாசன திருத்தம் தேவை இல்லை என்று டிரம்ப் கூறி உள்ளார். #Citizenship #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து, மக்கள் சென்று குடியேறி உள்ளனர். அங்கு தம்பதியராக வாழ்கிற பிற நாட்டினருக்கு குழந்தை பிறக்கிறபோது, அந்த குழந்தைக்கு தாமாகவே அமெரிக்க குடியுரிமை கிடைத்து விடுகிறது. இதற்கு அந்த நாட்டின் அரசியல் சாசனத்தின் 14-வது திருத்தம் அனுமதி அளித்துள்ளது.

    ஆனால் இப்படி அங்கு பிறக்கிற பிற நாடுகளை சேர்ந்த தம்பதியரின் குழந்தைகளுக்கு குடியுரிமை அளிப்பது முடிவுக்கு கொண்டு வரப்படும் என ஜனாதிபதி டிரம்ப், கடந்த செவ்வாய்க்கிழமையன்று அதிரடியாக அறிவித்தார்.

    டிரம்பின் இந்த அறிவிப்புக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக அமெரிக்க எம்.பி.க்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    செனட் சபை எம்.பி. பேட்ரிக் லீஹி கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்காவில் பிறக்கிற பிற நாட்டு தம்பதியரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கி, அரசியல் சாசனத்தின் 14-வது திருத்தம் அனுமதி அளித்துள்ளது. அப்படி இருக்கிறபோது, அதை ஜனாதிபதியின் நிர்வாக உத்தரவு மாற்றி அமைத்து விட முடியாது. இது டிரம்புக்கு புரியவில்லை” என சாடினார்.

    ஷீலா ஜாக்சன் லீ என்ற பெண் எம்.பி., “ அரசியல் சாசன அடிப்படையின்றி இது பயமுறுத்துகிற மற்றொரு முயற்சி. டிரம்பின் 2 ஆண்டு பதவிக்காலத்தின், சகிப்புத்தன்மையின்மை, பிற நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி உணர்வு ஆகியவற்றில் இருந்தும் மக்களை திசை திருப்பும் முயற்சி இது” என்று கூறினார்.

    இந்த நிலையில் டிரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்த விவகாரம் குறித்து அவர் கூறியதாவது:-

    பிறப்பினால் வருகிற குடியுரிமை விவகாரம் மிக மிக முக்கியமான பிரச்சினை. இது மக்கள் நினைப்பதை விட குழப்பம் குறைவான பிரச்சினைதான் என்று நான் கருதுகிறேன்.

    பிறப்பால் வருகிற குடியுரிமை விவகாரத்தில் அரசியல் சாசன திருத்தம் தேவை இல்லை. அதை நாடாளுமன்றத்தில் ஒரு எளிமையான ஓட்டெடுப்பின் மூலமே கொண்டு வந்து நிறைவேற்றி விட முடியும். இன்னும் சொல்லப்போனால் ஆற்றல் வாய்ந்த சில சட்ட நிபுணர்களை நான் ஆலோசித்து, ஒரு நிர்வாக உத்தரவின்மூலம் நடைமுறைப்படுத்தி விட முடியும்.

    அதே நேரத்தில் நாடாளுமன்ற ஓட்டெடுப்பின்மூலம் இதைக் கொண்டு வருவதற்குத்தான் முன்னுரிமை அளிப்பேன். அதுதான் நிரந்தர தீர்வு. அதே நேரத்தில் நிர்வாக உத்தரவின் மூலமும் இதைச் செய்து விட முடியும் என்பது எனது நம்பிக்கை. இறுதியில் இந்தப் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுக்கும்.

    இதற்கு முன் இங்கே குழந்தை பெற்றிராத பிற நாட்டினர், இங்கு வந்து குழந்தை பெற்றுக்கொள்கின்றனர், அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையும் கிடைத்து விடுகிறது. இங்கு இப்படியெல்லாம் குழந்தை பெற்று, குடியுரிமை பெறுவது என்பது அபத்தமான ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×